×

குழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சியில் பாலியல் கேள்விகள்: டிவி சேனலுக்கு தேசிய ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி: குழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சியில் பாலியல் கேள்விகள் கேட்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம், சம்பந்தப்பட்ட டிவி சேனலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பிரபல பொழுதுபோக்கு தனியார் டிவி சேனலில் குழந்தைகளுக்கான நடன ரியாலிட்டி ஷோ நடத்தப்படுகிறது. சினிமா இயக்குனர் அனுராக் பாசு, நடன இயக்குனர் கீதா கபூர், நடிகை ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். தொலைக்காட்சி நடிகர் ரித்விக் தஜானி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். குழந்தைகளுக்கான இந்த நடன நிகழ்ச்சியின் எபிசோடில், குழந்தையிடம் பெற்றோரைப் பற்றி மோசமான மற்றும் வெளிப்படையான பாலியல் கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து மேற்கண்ட எபிசோடை ஒளிபரப்பில் இருந்து நீக்குமாறு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், சம்பந்தப்பட்ட டிவி சேனலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அதில், ‘குழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடுவர்கள், குழந்தையிடம் அவரது பெற்றோரைப் பற்றி மோசமான மற்றும் வெளிப்படையான பாலியல் கேள்விகளைக் கேட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவைப் பார்க்கும், குழந்தைகளிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளும் பொருத்தமற்றவையாகவும், இயற்கைக்கு மாறானதாவும், குழந்தைகளிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் அல்ல என்பதும் தெரிகிறது. எனவே மேற்கண்ட எபிசோடை உடனடியாக ஒளிபரப்பில் இருந்து நீக்க வேண்டும். மேலும் மைனர் நடன கலைஞர்களிடம் எதற்காக இதுபோன்ற பொருத்தமற்ற கேள்விகள் கேட்கப்பட்டன என்பதற்கான விளக்கத்தை, தாங்கள் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சியில் பாலியல் கேள்விகள்: டிவி சேனலுக்கு தேசிய ஆணையம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : National Commission ,New Delhi ,National Children's Rights Commission ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி